திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

காமத்துப்பால்

களவியல்     கற்பியல்    
பிரிவாற்றாமை    படர்மெலிந்திரங்கல்    கண்விதுப்பழிதல்    பசப்புறுபருவரல்    தனிப்படர்மிகுதி    நினைந்தவர்புலம்பல்    கனவுநிலையுரைத்தல்    பொழுதுகண்டிரங்கல்    உறுப்புநலனழிதல்    நெஞ்சொடுகிளத்தல்    நிறையழிதல்    அவர்வயின்விதும்பல்    குறிப்பறிவுறுத்தல்    புணர்ச்சிவிதும்பல்    நெஞ்சொடுபுலத்தல்    புலவி    புலவி நுணுக்கம்    ஊடலுவகை   

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

சாலமன் பாப்பையா : பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

மு.வ : பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

சாலமன் பாப்பையா : பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

மு.வ : மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

மு.வ : பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

மு.வ : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

சாலமன் பாப்பையா : காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

மு.வ : யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

சாலமன் பாப்பையா : முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

மு.வ : மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

மு.வ : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

சாலமன் பாப்பையா : முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

மு.வ : ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

சாலமன் பாப்பையா : இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

மு.வ : அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

மு.வ : ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்