திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
காமத்துப்பால்
களவியல் கற்பியல்உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
சாலமன் பாப்பையா : நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
மு.வ : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
சாலமன் பாப்பையா : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
மு.வ : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
சாலமன் பாப்பையா : தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.
மு.வ : தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
சாலமன் பாப்பையா : முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.
மு.வ : மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
சாலமன் பாப்பையா : கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
மு.வ : காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
சாலமன் பாப்பையா : தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?
மு.வ : வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
சாலமன் பாப்பையா : வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.
மு.வ : கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
சாலமன் பாப்பையா : காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே
மு.வ : காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
சாலமன் பாப்பையா : தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்
மு.வ : கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |