திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

காமத்துப்பால்

களவியல்     கற்பியல்    
பிரிவாற்றாமை    படர்மெலிந்திரங்கல்    கண்விதுப்பழிதல்    பசப்புறுபருவரல்    தனிப்படர்மிகுதி    நினைந்தவர்புலம்பல்    கனவுநிலையுரைத்தல்    பொழுதுகண்டிரங்கல்    உறுப்புநலனழிதல்    நெஞ்சொடுகிளத்தல்    நிறையழிதல்    அவர்வயின்விதும்பல்    குறிப்பறிவுறுத்தல்    புணர்ச்சிவிதும்பல்    நெஞ்சொடுபுலத்தல்    புலவி    புலவி நுணுக்கம்    ஊடலுவகை   

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

சாலமன் பாப்பையா : என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?

மு.வ : விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

சாலமன் பாப்பையா : இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

மு.வ : அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

மு.வ : காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

சாலமன் பாப்பையா : நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

மு.வ : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

சாலமன் பாப்பையா : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?

மு.வ : அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

சாலமன் பாப்பையா : விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

மு.வ : விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

சாலமன் பாப்பையா : முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

மு.வ : தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

சாலமன் பாப்பையா : இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

மு.வ : இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

சாலமன் பாப்பையா : இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

சாலமன் பாப்பையா : என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்