திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

காமத்துப்பால்

களவியல்     கற்பியல்    
பிரிவாற்றாமை    படர்மெலிந்திரங்கல்    கண்விதுப்பழிதல்    பசப்புறுபருவரல்    தனிப்படர்மிகுதி    நினைந்தவர்புலம்பல்    கனவுநிலையுரைத்தல்    பொழுதுகண்டிரங்கல்    உறுப்புநலனழிதல்    நெஞ்சொடுகிளத்தல்    நிறையழிதல்    அவர்வயின்விதும்பல்    குறிப்பறிவுறுத்தல்    புணர்ச்சிவிதும்பல்    நெஞ்சொடுபுலத்தல்    புலவி    புலவி நுணுக்கம்    ஊடலுவகை   

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

சாலமன் பாப்பையா : நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

மு.வ : நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

சாலமன் பாப்பையா : நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

மு.வ : நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

மு.வ : நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

சாலமன் பாப்பையா : நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

மு.வ : நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

மு.வ : என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

சாலமன் பாப்பையா : நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

மு.வ : நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!

மு.வ : என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

மு.வ : என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

சாலமன் பாப்பையா : நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

மு.வ : நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்