திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
காமத்துப்பால்
களவியல் கற்பியல்வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
மு.வ : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
சாலமன் பாப்பையா : ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.
மு.வ : தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
சாலமன் பாப்பையா : என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
மு.வ : வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
மு.வ : முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
சாலமன் பாப்பையா : என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
மு.வ : என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
சாலமன் பாப்பையா : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
மு.வ : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்?
சாலமன் பாப்பையா : கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?
மு.வ : என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
சாலமன் பாப்பையா : அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.
மு.வ : அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
சாலமன் பாப்பையா : தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.
மு.வ : தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
சாலமன் பாப்பையா : என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
மு.வ : துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |