திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
சாலமன் பாப்பையா : தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
மு.வ : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
சாலமன் பாப்பையா : பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
மு.வ : பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.
சாலமன் பாப்பையா : கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
மு.வ : ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
சாலமன் பாப்பையா : இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
மு.வ : அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.
சாலமன் பாப்பையா : இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
மு.வ : உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
சாலமன் பாப்பையா : தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
மு.வ : புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.
சாலமன் பாப்பையா : இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
மு.வ : புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
சாலமன் பாப்பையா : பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
மு.வ : குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
சாலமன் பாப்பையா : (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
மு.வ : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
சாலமன் பாப்பையா : எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
மு.வ : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |