திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

பொருட்பால்

அரசியல்     அமைச்சியல்     அரணியல்     கூழியல்     படையில்     நட்பியல்     குடியியல்    
நட்பு    நட்பாராய்தல்    பழைமை    தீ நட்பு    கூடாநட்பு    பேதைமை    புல்லறிவாண்மை    இகல்    பகைமாட்சி    பகைத்திறந்தெரிதல்    உட்பகை    பெரியாரைப் பிழையாமை    பெண்வழிச்சேறல்    வரைவின்மகளிர்    கள்ளுண்ணாமை    சூது    மருந்து   

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

சாலமன் பாப்பையா : மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

மு.வ : மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

சாலமன் பாப்பையா : தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

மு.வ : கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

சாலமன் பாப்பையா : மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

மு.வ : மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

மு.வ : மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

மு.வ : மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

சாலமன் பாப்பையா : தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

மு.வ : மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

சாலமன் பாப்பையா : மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

மு.வ : மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.

சாலமன் பாப்பையா : தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

மு.வ : மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

சாலமன் பாப்பையா : அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

மு.வ : அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

சாலமன் பாப்பையா : சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

மு.வ : நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்