திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

பொருட்பால்

அரசியல்     அமைச்சியல்     அரணியல்     கூழியல்     படையில்     நட்பியல்     குடியியல்    
குடிமை    மானம்    பெருமை    சான்றாண்மை    பண்புடைமை    நன்றியில்செல்வம்    நாணுடைமை    குடிசெயல்வகை    உழவு    நல்குரவு    இரவு    இரவச்சம்    கயமை   

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

சாலமன் பாப்பையா : ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

மு.வ : இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

சாலமன் பாப்பையா : புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

மு.வ : புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

மு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

மு.வ : மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

மு.வ : மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

சாலமன் பாப்பையா : உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?

மு.வ : மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

சாலமன் பாப்பையா : இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

மு.வ : மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

சாலமன் பாப்பையா : குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

மு.வ : ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

சாலமன் பாப்பையா : மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

மு.வ : தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

சாலமன் பாப்பையா : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

மு.வ : தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்