திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

பொருட்பால்

அரசியல்     அமைச்சியல்     அரணியல்     கூழியல்     படையில்     நட்பியல்     குடியியல்    
குடிமை    மானம்    பெருமை    சான்றாண்மை    பண்புடைமை    நன்றியில்செல்வம்    நாணுடைமை    குடிசெயல்வகை    உழவு    நல்குரவு    இரவு    இரவச்சம்    கயமை   

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

சாலமன் பாப்பையா : தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.

மு.வ : ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

சாலமன் பாப்பையா : பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.

மு.வ : பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

சாலமன் பாப்பையா : மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

மு.வ : சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

மு.வ : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

சாலமன் பாப்பையா : தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

மு.வ : பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

சாலமன் பாப்பையா : தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

மு.வ : தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

மு.வ : பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

சாலமன் பாப்பையா : எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

மு.வ : பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

மு.வ : பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

சீருடைச் செல்வர் சிறுதுனி மார?
வறங்கூர்ந் தனையது உடைத்து.

சாலமன் பாப்பையா : பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

மு.வ : புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்