திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
சாலமன் பாப்பையா : ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
மு.வ : நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.
சாலமன் பாப்பையா : பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
மு.வ : பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
சாலமன் பாப்பையா : நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
மு.வ : அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
சாலமன் பாப்பையா : எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.
மு.வ : எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.
சாலமன் பாப்பையா : செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.
மு.வ : (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.
சாலமன் பாப்பையா : முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
மு.வ : செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
சாலமன் பாப்பையா : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
மு.வ : இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
சாலமன் பாப்பையா : ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
மு.வ : ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
சாலமன் பாப்பையா : தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.
மு.வ : மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
சாலமன் பாப்பையா : மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மு.வ : தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |