திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
சாலமன் பாப்பையா : அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
மு.வ : அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
சாலமன் பாப்பையா : படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
மு.வ : (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
சாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
மு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.
சாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மு.வ : கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
சாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மு.வ : கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
சாலமன் பாப்பையா : படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
மு.வ : கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.
சாலமன் பாப்பையா : நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
மு.வ : நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
சாலமன் பாப்பையா : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
மு.வ : கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
சாலமன் பாப்பையா : படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
மு.வ : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
சாலமன் பாப்பையா : விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
மு.வ : அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |