திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

பொருட்பால்

அரசியல்     அமைச்சியல்     அரணியல்     கூழியல்     படையில்     நட்பியல்     குடியியல்    
இறைமாட்சி    கல்வி    கல்லாமை    கேள்வி    அறிவுடைமை    குற்றங்கடிதல்    பெரியாரைத் துணைக்கோடல்    சிற்றினஞ்சேராமை    தெரிந்துசெயல்வகை    வலியறிதல்    காலமறிதல்    இடனறிதல்    தெரிந்துதெளிதல்    தெரிந்துவினையாடல்    சுற்றந்தழால்    பொச்சாவாமை    செங்கோன்மை    கொடுங்கோன்மை    வெருவந்தசெய்யாமை    கண்ணோட்டம்    ஒற்றாடல்    ஊக்கமுடைமை    மடியின்மை    ஆள்வினையுடைமை    இடுக்கணழியாமை   

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

சாலமன் பாப்பையா : முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

மு.வ : கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

சாலமன் பாப்பையா : மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

மு.வ : கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்.

சாலமன் பாப்பையா : பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

மு.வ : பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்.

சாலமன் பாப்பையா : வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

மு.வ : தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.

சாலமன் பாப்பையா : ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

மு.வ : ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்.

சாலமன் பாப்பையா : கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

மு.வ : கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

சாலமன் பாப்பையா : கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

மு.வ : கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.

சாலமன் பாப்பையா : தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

மு.வ : தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

சாலமன் பாப்பையா : தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

மு.வ : தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

சாலமன் பாப்பையா : எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

மு.வ : எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்