திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.
மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
சாலமன் பாப்பையா : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
மு.வ : வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
சாலமன் பாப்பையா : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
மு.வ : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
சாலமன் பாப்பையா : செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
மு.வ : தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
சாலமன் பாப்பையா : ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
மு.வ : விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்.
சாலமன் பாப்பையா : பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?
மு.வ : செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.
சாலமன் பாப்பையா : உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
மு.வ : மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்.
சாலமன் பாப்பையா : உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
மு.வ : இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்.
சாலமன் பாப்பையா : தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
மு.வ : இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
சாலமன் பாப்பையா : ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
மு.வ : ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
அறத்துப்பால் |
பொருட்பால் |
காமத்துப்பால் |