திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

பொருட்பால்

அரசியல்     அமைச்சியல்     அரணியல்     கூழியல்     படையில்     நட்பியல்     குடியியல்    
இறைமாட்சி    கல்வி    கல்லாமை    கேள்வி    அறிவுடைமை    குற்றங்கடிதல்    பெரியாரைத் துணைக்கோடல்    சிற்றினஞ்சேராமை    தெரிந்துசெயல்வகை    வலியறிதல்    காலமறிதல்    இடனறிதல்    தெரிந்துதெளிதல்    தெரிந்துவினையாடல்    சுற்றந்தழால்    பொச்சாவாமை    செங்கோன்மை    கொடுங்கோன்மை    வெருவந்தசெய்யாமை    கண்ணோட்டம்    ஒற்றாடல்    ஊக்கமுடைமை    மடியின்மை    ஆள்வினையுடைமை    இடுக்கணழியாமை   

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.

சாலமன் பாப்பையா : பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

மு.வ : முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

சாலமன் பாப்பையா : பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

மு.வ : மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

சாலமன் பாப்பையா : பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

மு.வ : தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

சாலமன் பாப்பையா : ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

மு.வ : தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

சாலமன் பாப்பையா : முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

மு.வ : ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

சாலமன் பாப்பையா : வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

மு.வ : வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்.

சாலமன் பாப்பையா : செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

மு.வ : (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சாலமன் பாப்பையா : பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

மு.வ : சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது.

சாலமன் பாப்பையா : மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

மு.வ : அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

சாலமன் பாப்பையா : பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

மு.வ : வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்