திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

காமத்துப்பால்

களவியல்     கற்பியல்    
பிரிவாற்றாமை    படர்மெலிந்திரங்கல்    கண்விதுப்பழிதல்    பசப்புறுபருவரல்    தனிப்படர்மிகுதி    நினைந்தவர்புலம்பல்    கனவுநிலையுரைத்தல்    பொழுதுகண்டிரங்கல்    உறுப்புநலனழிதல்    நெஞ்சொடுகிளத்தல்    நிறையழிதல்    அவர்வயின்விதும்பல்    குறிப்பறிவுறுத்தல்    புணர்ச்சிவிதும்பல்    நெஞ்சொடுபுலத்தல்    புலவி    புலவி நுணுக்கம்    ஊடலுவகை   

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

சாலமன் பாப்பையா : என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

மு.வ : பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

சாலமன் பாப்பையா : அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

மு.வ : அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

சாலமன் பாப்பையா : எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

மு.வ : அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

சாலமன் பாப்பையா : என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?

மு.வ : அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

சாலமன் பாப்பையா : என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

மு.வ : காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

சாலமன் பாப்பையா : நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

மு.வ : பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

மு.வ : என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

சாலமன் பாப்பையா : உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

மு.வ : இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

சாலமன் பாப்பையா : தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

மு.வ : நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

சாலமன் பாப்பையா : சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

மு.வ : பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்