திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural    

அறத்துப்பால்

பாயிரவியல்     இல்லறவியல்     துறவறவியல்     ஊழியல்    
இல்வாழ்க்கை    வாழ்க்கைத் துணைநலம்    புதல்வரைப் பெறுதல்    அன்புடைமை    விருந்தோம்பல்    இனியவைகூறல்    செய்ந்நன்றி அறிதல்    நடுவு நிலைமை    அடக்கமுடைமை    ஒழுக்கமுடைமை    பிறனில் விழையாமை    பொறையுடைமை    அழுக்காறாமை    வெஃகாமை    புறங்கூறாமை    பயனில சொல்லாமை    தீவினையச்சம்    ஒப்புரவறிதல்    ஈகை    புகழ்   

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

சாலமன் பாப்பையா : ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

மு.வ : வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

சாலமன் பாப்பையா : சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

மு.வ : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

மு.வ : உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

சாலமன் பாப்பையா : தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.

மு.வ : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

சாலமன் பாப்பையா : பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

மு.வ : புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

சாலமன் பாப்பையா : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

மு.வ : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

சாலமன் பாப்பையா : புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

மு.வ : தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

சாலமன் பாப்பையா : புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

மு.வ : தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

சாலமன் பாப்பையா : புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

மு.வ : புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

சாலமன் பாப்பையா : தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

மு.வ : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்